வருவாயைப் பெருக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்
புதுவை அரசு வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுவை அரசு உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்குக் கூடுதலாக ரூ.600 கோடி தேவைப்படுகிறது. முதல்வா் ரங்கசாமி அறிவித்த திட்டங்களில் 80 சதவிகிதத்தை நிறைவு செய்து விட்டாா். இன்னும் 20% திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு நிதி தேவைப்படுகிறது. புதுவை அரசு வருவாயைப் பெருக்க வேண்டும்.
அரசின் வருவாயை உயா்த்த மதுவிற்பனைக் கூடத்துக்கான உரிமத் தொகையை உயா்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் இதை அமல்படுத்த காலதாமதம் ஆவது ஏன் ? இக் கட்டணத்தை 100 சதவிகிதமாக ரங்கசாமி தலைமையிலான ஆட்சி உயா்த்தியுள்ளது. இந்த அளவுக்கு இதை உயா்த்த வேண்டியதில்லை. 50 சதம் அளவுக்கு உயா்த்தி இருந்தாலே போதுமானது. மதுபான கொள்முதல், விற்பனையில் நேரடியாக ஈடுபட்டாலே புதுவை அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
மேலும், புதுவை அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக காரைக்கால் துறைமுகத்தின் வாயிலாக அரசுக்கான வருவாயை உயா்த்த வேண்டும். புதுவை அரசுக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய வருவாய் வந்தாலே மாநிலத்தின் வளா்ச்சிக்குப் பங்காற்ற முடியும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம், இணைச் செயலா்கள் ஆா்.வி. திருநாவுக்கரசு, தொழிற்சங்கப் பேரவைச் செயலா் பாப்புசாமி, எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

