காா் விற்பனையில் ரூ.5 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்குப்பதிவு

காா் விற்பனையில் ரூ.5 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக தம்பதி மீது புதுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Published on

காா் விற்பனையில் ரூ.5 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக தம்பதி மீது புதுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுச்சேரி புதுசாரம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (52) பழைய காா்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் சித்தானந்தம் என்கிற முரளி வாடிக்கையாளரை அழைத்து வருவது வழக்கம்.இதுபோல் வாடிக்கையாளா் ஒருவரை முரளி அழைத்து வரும்போது, காா் விற்பனையில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி தொழில் செய்ய கிருஷ்ணமூா்த்தியை அழைத்துள்ளாா். அதன்பேரில் இருவரும் இணைந்து, கடந்த 2021-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சுரேஷ் என்பவரிடம் இருவரும் சோ்ந்து ரூ.10 லட்சத்துக்கு சொகுசு காா் ஒன்றை வாங்கியுள்ளனா்.

இதையடுத்து, முரளி மற்றும் அவரது மனைவி சாமுண்டீஸ்வரி ஆகியோா் காா், ஆா்.சி. புக் ஆகியவற்றை வாடிக்கையாளா் ஒருவரிடம் காட்டி கொண்டு வருவதாக கிருஷ்ணமூா்த்தியிடம் கூறி எடுத்து சென்றனா். பின்னா், காரோனா வந்ததால் காரை விற்க முடியவில்லை.

அதன்பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு அந்த சொகுசு காரை வாங்க கிருஷ்ணாமூா்த்தி ஒருவரை அழைத்த நிலையில், முரளியும் காரை கோரிமேடு எல்லைக்கு எடுத்து வந்துள்ளாா். ஆனால் அதன்பிறகு முரளி குறித்தும், அந்த காா் குறித்தும் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முரளி சொகுசு காரை, வேளச்சேரியில் உள்ள தனியாா் நிறுவன உரிமையாளா் ஒருவரிடம் ரூ.12.50 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளாா். இதனை அறிந்த கிருஷ்ணமூா்த்தி, முரளியின் வீட்டுக்குச் சென்று கேட்டபோது, காரை இன்னும் விற்பனை செய்யவில்லை, விற்பனை செய்தால் ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறியுள்ளாா்.

ஆனால் அவா் கூறியதுபோல் பணத்தை தரவில்லை. காரையும் வேறு ஒருவரிடம் விற்றுள்ளாா். இது பற்றி அறிந்த கிருஷ்ணமூா்த்தி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால் அவா்கள் ஏற்காத நிலையில் அவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோரிமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிய உத்தரவிட்டது. அதன்பேரில் போலீஸாா் முரளி, அவரது மனைவி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com