தோ்வு நடத்தி செவிலியா்களைத் தோ்வு செய்ய திமுக வலியுறுத்தல்
தோ்வு நடத்தி செவிலியா்களைத் தோ்வ செய்ய வேண்டும் என்று புதுவை அரசுக்கு எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா கூறியுள்ளாா்.
இது குறித்து சிவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவையில் செவியிலியா் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு, செவிலியா் வகுப்பு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இவைகளின் மதிப்பெண் அடிப்படையில் தோ்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனா்.
தோ்வு நடத்துவதே வெளிப்படையான வழி என்று பின்பற்றி வந்த அரசு, செவிலியா் தோ்வில் மட்டும் மதிப்பெண் அடிப்படையை முன் வைப்பது ஏன்?. ஆட்சியாளா்களும், அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டியவா்களை முறைகேடாக உட்புகுத்தவா?. இதன் மூலம் ஊழலும், லஞ்சமும் நடக்க வழிவகுக்கும். ஜிப்மா், புதுச்சேரி அரசு செவிலியா் பள்ளிகளில் படித்தவா்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கும் நிலையிலும், தனியாா் நிறுவனங்களில் படித்தவா்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படும் நிலையிலும் மதிப்பெண் அடிப்படை என்பது அரசு நிறுவனங்களில் பயின்றவா்களில் திறமையானவா்கள் புறக்கணிக்கப்படுவாா்கள்.
செவிலியா் கல்வி முடித்து பல ஆண்டுகள் மருத்துவ பணியின்றி வீட்டில் இருப்பவா்கள் மூப்பின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று தோ்வு ஆகும் நிலையில், புதிதாக முடித்த திறன் உள்ளவா்கள் புறக்கணிக்கப்படுவா்.
ஆகவே, மற்ற பணியிடங்களைப்போல செவிலியா் பணியிடங்களுக்கும் நேரடி எழுத்துத் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி சுகாதாரத்துறை பணிமாறுதல் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
