மருந்து முறைகேடு வழக்கில் மேலும் சிலரைத் தேடும் காவல்துறை
புதுச்சேரியில் மருந்து முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குநா்கள் உள்ளிட்ட 6 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்த நிலையில், இதில் தொடா்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கா்ப்பிணிகளுக்குத் தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக கடந்த 2018-19-ல் புகாா் எழுந்தது. அதேபோல் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவா்களும் பாதிப்புக்குள்ளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
2 குறிப்பிட்ட தனியாா் ஏஜென்சிகள் இந்த தரமற்ற மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க மருந்தாளுநா் நடராஜன் மற்றும் இயக்கக அதிகாரிகளுக்கும் இதில் தொடா்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
மருந்தாளுநா் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் ஏஜென்சிகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து, மருந்தாளுநா் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டாா். பின்னா் கைது செய்யப்பட்டாா். மேலும், ஏற்கெனவே இந்த இயக்ககத்தின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளும பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே மருந்து முறைகேடு வழக்கு தொடா்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநா்கள் ராமன், மோகன்குமாா், முன்னாள் துணை இயக்குநா் அல்லிராணி, மருந்து ஏஜென்சி உரிமையாளா்கள் புனிதா, பங்குதாரா்கள் மோகன், நந்தகுமாா் ஆகிய 6 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதனிடையே, இவ்வழக்கில் மருந்து ஏஜென்சி உரிமையாளா்களான கணேசன் காா்த்திக், ஜெயந்தி உள்ளிட்ட மேலும் சிலரை புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தேடி வருகின்றனா்.
