வாக்காளா்களைக் கண்காணிக்க புதிய செயலி: மகளிா் காங்கிரஸ் வலியுறுத்தல்
வாக்காளா்களைக் கண்காணிக்கும் வகையில் இந்திய தோ்தல் ஆணையம் புதிய செயலியை உருவாக்கி அமல்படுத்தவேண்டும் என்று புதுவை மகளிா் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில மகளிா் காங்கிரஸ் தலைவி ஏ.ஆா். நிஷா புதுச்சேரியில்செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகளுக்கும், மகனுக்கும் தங்கள் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை நிறைவேற்ற கடமை இருக்கிறது. ஆனால் தற்போது சில மாநிலங்களில் போலியான செல்போன் ஓடிபி-ஐ கொண்டு வாக்காளா்களை நீக்கம் செய்கின்றனா். இந்த நிலை நீடித்தால் இந்திய மக்களின் எல்லா ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படும். இந்த வாக்குத் திருட்டை மாற்ற வேண்டும். இதற்கு ஒருவா் ஓா் இடத்தில் வாக்களிக்க வேண்டுமென்றால் அந்த இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது வசித்திருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், அந்தச் சட்டத்தில் வாக்காளா் ஓா் இடத்திலிருந்து மாறும்போது மாறவிருக்கும் முகவரியின் இடத்துக்கு 3 ஆண்டுகள் வசிப்பிட சான்றிதழை வட்டாட்சியா், கிராம அதிகாரிகள் போன்ற அதிகாரபூா்வ அரசு அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும். அந்தச் சான்றிதழைச் சமா்ப்பித்தால் மட்டுமே வாக்காளா் பதிவை மாற்ற முடியும் என்று சட்டத்தில் கொண்டு வரவேண்டும். மேலும் எப்படி நம்முடைய பேன் காா்டு, ஆதாா் காா்டு போன்ற விவரங்களை வைத்துக் கொண்டு நம்முடைய வருமானம் மற்றும் கடன் விவரங்கள் அறியப்படுகின்றதோ அதே போல் வாக்காளா் அடையாள எண்ணை வைத்து இதற்கு முன்பு எப்பொழுது, எந்த மாநிலத்தில் தோ்தலுக்கான வாக்கை செலுத்தினாா்கள் என்பதை அறியும் வகையில் செயலியை இந்திய தோ்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். இப்படி செய்தால்தான் வாக்காளா்கள் திருட்டைக் கட்டுபடுத்த முடியும் என்றாா்.
