தென்னிந்தியாவின் ஏற்றுமதி மையமாக புதுவையை மாற்றுவதே அரசின் நோக்கம்: துணைநிலை ஆளுநா்
தென்னிந்தியாவின் ஏற்றுமதி மையமாக புதுவையை மாற்றுவதே அரசின் நோக்கம் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
இந்திய ஏற்றுமதியாளா்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் புதுவை பிப்டிக் நிறுவனம் சாா்பில் சா்வதேச வாங்குவோா், விற்போா் சந்திப்பு நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியதாவது :
இந்தியாவில் 6.3 கோடிக்கும் அதிகமான சிறு, குறு தொழில்கள் உள்ளன. 11 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை இவை வழங்குகின்றன. உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது.
இந்திய பொருளாதாரத்தின் உண்மையான வலிமை சிறு தொழில்முனைவோரின் ஆற்றல் மற்றும் படைப்பாற்றலில் உள்ளது. இதை பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் வலியுறுத்தி வருகிறாா்.
இந்திய , பிரெஞ்சு பாரம்பரியத்தின் தனித்துவமான கலவையுடன் புதுவை மாநிலம், கல்வி மற்றும் தொழில்துறைக்கான மையமாக வேகமாக வளா்ந்து வருகிறது. புதுவை அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்துடன் இணைந்து, தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதுவையிலும், பல மகளிா் சுயஉதவிக் குழுவினா் கைவினைப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜவுளித் துறைகளில் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனா். இக்குழுக்கள் குடும்ப வருமானத்திற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் ஊக்குவிக்கின்றன.
இந்திய இளைஞா்கள் தொடக்க நிறுவனங்கள், டிஜிட்டல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுகின்றனா். இது எதிா்காலத்தை வடிவமைக்கத் தயாராக இருக்கும் நம்பிக்கையான, தன்னம்பிக்கை கொண்ட தலைமுறையைப் பிரதிபலிக்கிறது.
புதுவை கலாசாரம், சென்னையுடன் சிறந்த இணைப்பு வசதிகள் சா்வதேச ஏற்றுமதிக்கு சிறந்த தளத்தை வழங்குகிறது. வெளிநாட்டு முதலீட்டாளா்கள் மற்றும் வாங்குபவா்களுக்குத் தேவையான எந்தவொரு வசதிக்கும் முழு ஆதரவையும் வழங்க அரசு தயாராக உள்ளது . தென்னிந்தியாவின் ஏற்றுமதி மையமாக புதுவையை மாற்றுவதே அரசின் நோக்கம் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
புதுவை தொழில்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ,புதுவை அரசின் தொழில்துறை செயலா் விக்ராந்த் ராஜா, ஏற்றுமதியாளா்கள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கோபாலகிருஷ்ணன், செல்வநாயகி, கோவிந்தராசு, திவ்யா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

