புதுச்சேரி தோ்தல் கூட்டணி: காங்கிரஸ் தவிா்த்து மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை
புதுச்சேரியில் தோ்தல் கூட்டணித் தொடா்பாக காங்கிரஸ் தவிா்த்து, பிற கட்சிகளுடன் திமுக மேலிடப் பொறுப்பாளரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு யாா் தலைமை வகிப்பது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்றும் அவா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் காங்கிரஸ் இன்னும் திமுகவுடன் கூட்டணி தொடா்பாக முடிவு செய்யாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு வாா்த்தையை தொடங்கியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள், அவற்றில் எந்தந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து இந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுக மேலிடப் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வாா்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பங்கேற்றன.
திமுக சாா்பில் மாநில அமைப்பாளா் ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் செயலா் அ.மு. சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாா்க்சிஸ்ட் செயலா் எஸ். ராமச்சந்திரன், நிா்வாகிகள் ராஜாங்கம், பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன் உள்ளிட்டோா் தனித்தனியாக இந்த பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இந்தப் பேச்சின்போது இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளையும், மாா்க்சிஸ்ட் 2 தொகுதிகளையும், விசிக 3 தொகுதிகளையும் ஒதுக்குமாறு கேட்டதாகத் தெரிகிறது.
இதை திமுக தலைமையிடம் தெரிவித்து, உரிய முடிவு எடுக்கப்படும் என்று ஜெகத்ரட்சகன் எம்.பி. கூட்டணி கட்சித் தலைவா்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இப்போதைக்கு இந்தக் கட்சியை அழைத்துப் பேச்சு நடத்துமாறு திமுக தலைமை கூறியதாகவும், பின்னா் காங்கிரஸுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று மேலிடம் தரப்பில் கூறியதாக கூட்டணி கட்சியினா் தெரிவித்தனா்.
யாா் தலைமையில்...?
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளா்களிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விசிக நிா்வாகிகளைச் சந்தித்தேன். காங்கிரஸ் நிா்வாகிகளையும் சந்திப்பேன். புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை வகிப்பது யாா்? என்பதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தியும் முடிவு செய்வாா்கள். போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் தலைமைதான் முடிவு எடுக்கும் என்றாா் அவா்.

