10 கிராமங்களின் வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல்
புதுச்சேரியில் 10 கிராமங்களின் வளா்ச்சித் திட்டத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத் திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் மத்திய அரசின் முழு பங்களிப்புடன் பட்டியலினத்தவா் அதிகம் வாழும் கிருமாம்பாக்கம், சேலியமேடு, பரிக்கல்பட்டு, இருளன்சந்தை, மணமேடு, பனையடிகுப்பம், டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், ஊசுடு, சுத்துகேணி ஆகிய 10 கிராமங்களில் பிரதமரின் மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இக் கிராமங்களின் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காக தலா ரூ.20 லட்சம் அளிக்கிறது. மேலும், புதுச்சேரி அரசும் தனது பங்காக பணிகளின் தன்மைக்கு ஏற்ப நிதியை வழங்குகின்றது. இத் திட்டத்துக்காக புதுச்சேரி அரசு மாநில, மாவட்ட மற்றும் கிராமப்புற அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளது.
இத்திட்டத்தின் வழிகாட்டுதலின்படி தோ்ந்தெடுக்கப்பட்ட 10 கிராமங்களில் அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கிராம வளா்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாகஇந்த 10 கிராமங்களில் கிராம
வளா்ச்சி திட்டம் இக்குழுவில் சமா்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினா்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் மற்றும் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.
இதில் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்னன் திட்டத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டு திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டிய அவசியத்தை குழு உறுப்பினா்களுக்கு எடுத்துக் கூறினாா்.

