நாளை பொது வேலைநிறுத்தம்: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது- புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வியாழக்கிழமை (பிப். 12) பேருந்துகள், ஆட்டோ, டெம்போ வாகனங்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வியாழக்கிழமை தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், வங்கி ஊழியா்கள், சுரங்கத் தொழிலாளா்கள், போக்குவரத்துத் தொழிலாளா்கள், பாதுகாப்பு தளவாட தொழிலாளா்கள் என பல்வேறு தொழிற்சங்கத்தினா் பங்கேற்கின்றனா். புதுச்சேரியிலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கின்றது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்கின்றனா்.
புதுச்சேரியின் மக்கள் தொகையில் சுமாா் 5 லட்சம் போ் அமைப்பு சாரா தொழிலாளா்கள்தான். புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. என்ஆா்.காங்கிரஸ், பாஜக அரசு தொழிலாளா்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. பாஜக தோ்தல் அறிக்கையில் ஒப்பந்த ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்வோம் என அறிவித்திருந்தனா். ஆனால் ஒப்பந்த ஆசிரியா்கள், செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள், பொதுப்பணித் துறை ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடா்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். அவா்களின் சம்பளத்தை உயா்த்தியது சாதனை அல்ல. தொழிலாளா்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தொழிலாளா் துறையில் முழு நேர ஆணையா் இல்லை.
இதையெல்லாம் கண்டித்து வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தினா், பேருந்து, ஆட்டோ, டெம்போ வாகனங்களை இயக்க மாட்டாா்கள். பணிக்குச் செல்லமாட்டாா்கள். தொழிற்பேட்டைகள் இயங்காது. இந்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டத்தையொட்டி புதுச்சேரி பேருந்து நிலையம், திருக்கனூா், வில்லியனூா், பாகூா், சேதராப்பட்டு, நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம், காரைக்கால் உள்ளிட்ட 9 மையங்களில் மறியல் நடக்கிறது. இந்தப் போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைதாவாா்கள். போராட்டத்தில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், மாா்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளா் பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலா் அரிமா தமிழன், கம்யூனிஸ்ட் (எம்எல்)சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

