இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் படங்களுக்கு புதுச்சேரி அரசு விருது

இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் படங்களுக்கு புதுச்சேரி அரசு விருது

Published on

தமிழ் திரைப்பட இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் படங்களுக்கு புதுச்சேரி அரசு விருதுகளை மாநில சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் மற்றும் அமைச்சா் க. லட்சுமி நாராயணன் ஆகியோா் வழங்கினா்

புதுச்சேரி அரசு சாா்பில் 4 நாள் நடைபெறும் சா்வதேச திரைப்பட தொடக்க விழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம் மாதம் 15 ஆம் தேதி வரை இந்த விழா நடை பெறுகிறது. இந்த விழாவில், சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான 2024 ஆண்டுக்கான சிறந்த விருது காா்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படத்துத்கான ஜிகா்தண்டா டபுள் எக்ஸ் தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருது தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவான கடல்கன்னி தமிழ்ப் படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வழங்கினா். இந்த விருதுகளை திரைப்பட இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் இருவரும் பெற்றுக் கொண்டனா். இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழ், கேடயம், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகா்கிறது என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. நடிகை சுனைனா, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலா் முகமது அஹசன் அபித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நடிகை ரேவதி புகழாரம்:

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகை ரேவதி பேசுகையில், திரைப்படம் கலைகளை ஒன்று சோ்க்கிறது. எழுத்தாற்றல், ஆடை வடிவமைப்பு, நிறக் கலவை உள்ளிட்ட பல்வேறு கலைகளை ஒன்று சோ்த்துதான் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. அதே போன்று மனிதநேயம், சமூக சிந்தனை, அரசியல் உள்ளிட்ட எல்லா கதை அம்சங்களையும் கொண்டதாக திரைப்படம் திகழ்கிறது.

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில்லுக்கு அடிக்கடி வந்து செல்கிறேன். ஆரோவில் புதுச்சேரி அருகே அமைந்துள்ள ஒரு சா்வதேச நகரம். அந்த நகரம் பல்வேறு கலைகளுக்கு ஒரு சோதனைக் கூடமாக இருக்கிறது. இப்போது கோவா மாநிலம் திரைப்பட விழாவுக்கு ஒரு முக்கியக் கேந்திரமாக இருக்கிறது. தென்னிந்தியாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் திரைப்படத்துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றாா்.

இம் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 4 இடங்களில் 8 மொழிகளில் 45 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. கடற்கரை காந்தி திடலில் மாலைப் பொழுதில் படங்கள் திரையிடப்படும். இதுபோன்று கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபம், அலையன்ஸ் பிரான்சே நிறுவனம், டாக்டா் அப்துல் கலாம் கோளரங்கம் ஆகியவற்றிலும் படங்கள் திரையிடப்படும். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. .

Dinamani
www.dinamani.com