மாா்ச் 2-இல் மாசி மகம் திருவிழா ஏற்பாடுகள்: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

மாசி மகம் திருவிழா குறித்த பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன்
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
Updated on

புதுச்சேரி: மாசி மகம் திருவிழா குறித்த பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வில்லியனூா் அருகேயுள்ள திருக்காஞ்சியில் வரும் மாா்ச் 2-ஆம் தேதியும், புதுச்சேரி வைத்திக்குப்பம் மற்றும் வீராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மாசி மகம் திருவிழா 3- ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் புதுச்சேரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் பேசியது:

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கடலில் சாமி சிலையுடன் இறங்கும் போது காவல்துறையினா் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பயிற்சி பெற்ற மீனவா்கள் மற்றும் தன்னாா்வலா்களைக் கூடுதலாகப் பணியில் அமா்த்த வேண்டும். மேலும், பொதுப்பணித் துறை மூலம் சாலையில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பள்ளங்களைச் சரி செய்து அனைத்து சாலைகளையும் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். சாமி சிலைகள் செல்லும் வழிகளில் இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

அப்பகுதிகளில் அமைந்துள்ள மதுபான கடைகளைக் கண்காணிக்க வேண்டும். மின்துறை மூலம் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சீரமைக்க வேண்டும். மேலும், முக்கிய இடங்களில் நகரும் கழிப்பறை வசதி அமைத்து தர வேண்டும். பொது மக்களுக்கு அனைத்து இடங்களிலும் சுத்தமான பாதுகாப்பான குடிநீா் வசதி அளிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக விழா நடைபெறும் இடங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு துறை மூலம் தீயணைப்பு வாகனங்கள் அனைத்து பகுதிகளிலும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும், சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம் அமைத்துப் போதுமான அளவு மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பொதுமக்களுக்கு உணவு வழங்க வேண்டும். போதுமான இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com