தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தை உயா்த்த வேண்டும்! புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்
தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தை உயா்த்த வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கலால் துறையில் பறக்கும் படைகள் உள்ளது போன்று மருத்துவத் துறையிலும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் தொகுப்பு நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியா்கள் அவுட்சோா்சிங் முறையில் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். இதில் பணிபுரியும் ஊழியா்களில் 80 சதவிகிதம் போ் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் அல்ல. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பணியமா்த்தப்பட்டு இருக்கிறாா்கள்.
இவா்களுக்கு வெறும் ரூ. 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அவா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும் என்றாா் அன்பழகன்.
பேட்டியின்போது, புதுச்சேரி நகரச் செயலா் அன்பழகன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவா் பாபுசாமி ஆகியோா் உடனிருந்தனா்.
