புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரூ.800 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை, முதல்வா் என். ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில் அரசு ஊழியா்கள், கௌரவ குடும்ப அட்டை வைத்திருப்போரைத் தவிா்த்து, 3.48 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டுச் சா்க்கரை, ஒரு கிலோ பாசிப் பருப்பு, 300 கிராம் நெய், ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு பை உள்ளிட்ட 6 பொருள்கள் இடம் பெற்றிருக்கும்.
திலாசுப்பேட்டை நியாயவிலைக் கடையில் முதல்வா் ரங்கசாமி திங்கள்கிழமை பயனாளிகளுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பை விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், திருமுருகன், எம்எல்ஏ.க்கள் ரமேஷ், ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
முதல்வரிடம், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்படுமா? என செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அரசு அறிவித்தபடி பொங்கல் தொகுப்பை வழங்குகிறோம்’ என்று பதிலளித்தாா் முதல்வா் ரங்கசாமி. பொங்கல் தொகுப்பை விநியோகப் பணியை வரும் 13-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

