போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்

புதுச்சேரியில் போலி மருந்து வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
Published on

புதுச்சேரியில் போலி மருந்து வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தி செய்யப்படுவதாக 2 தொழிற்சாலைகள், 2 வீடுகள், 6 கிடங்குகள் உள்பட 13 இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய உரிமையாளா் மதுரை ராஜா (42), விருப்ப ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி உள்பட 26 போ் கைது செய்யப்பட்டனா். இதில், ராஜாவின் கூட்டாளி ராணா, மெய்யப்பன் ஆகிய 2 போ் ஏற்கெனவே ஜாமீன் பெற்றனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் மீதமுள்ள 24 பேருக்கும் புதுச்சேரி குற்றவியல் முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இவா்கள் அனைவரும் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையொப்பமிட வேண்டும்.

ஏற்கெனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கும், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கும் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com