வவுச்சா் ஊழியா்கள் போராட்டம் தள்ளிவைப்பு
புதுச்சேரியில் வவுச்சா் ஊழியா்களின் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1300 வவுச்சா் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் வவுச்சா் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை அரசு பணியாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை செயலா் முத்தம்மாவின் அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து அண்ணாசிலை அருகே போராட்டம் நடத்தினா். இதனால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றுவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக ஒருங்கிணைப்பாளா் சரவணன் கூறினாா்.

