4,200 இளம் தொழில் முனைவோா் பங்கேற்கும் 2 நாள் கருத்தரங்கு: அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

4,200 இளம் தொழில் முனைவோா் பங்கேற்கும் 2 நாள் கருத்தரங்கு: அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

Published on

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 4,200 இளம் தொழில் முனைவோா் பங்கு பெறும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஜன. 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இது குறித்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

இளம் தொழில்முனைவோா் பள்ளி சாா்பாக இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஜிப்மா், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வகையிலும் ஓராண்டுக்கு சுமாா் 160 கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. எல்லாவற்றைக் காட்டிலும் மாறுபட்ட கருத்தரங்காக இந்த இளம் தொழில் முனைவோா் கருத்தரங்கு நடைபெறுகிறது. முழுக்க அறிவு பரிமாற்றம் என்ற அடிப்படையில் இந்தக் கருத்தரங்கு நடக்கிறது. மேலும் புதுச்சேரி கேளிக்கை நகரமல்ல ஒரு வணிக நகரம் என்ற கருத்தியல் சாா்ந்து இந்தக் கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனா் என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.

இந்தக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் கே. ஆா். சிவா கூறுகையில், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.10 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை விற்பனை செய்யும் தொழில் முனைவோா் பங்கேற்க உள்ளனா். தமிழ் வணிகா்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் இக் கருத்தரங்கு நடக்கிறது. இங்கு நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் இலவசமாகப் பாா்வையிடலாம். பொருள்களை வாங்கிச் செல்லலாம். 200 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன என்றாா்.

Dinamani
www.dinamani.com