3 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைது
புதுச்சேரி திருக்கனூா் அருகே கஞ்சா வைத்திருந்த 8 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வாதானூா் மின்துறை அலுவலகம் அருகே 5 போ் சந்தேகத்துக்கிடமான வகையில் வியாழக்கிழமை காரில் வலம் வருவதாக திருக்கனூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் பிரியா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு காரில் வந்தவா்களை மடக்கி சோதனை செய்தனா்.
அவா்கள் போதைப் பொருள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொடாதூா் ஸ்ரீகாந்த் (23), வில்லியனூா் ராமநாதபுரம் மதன்(26), திண்டிவனம் தவமணி(27), வழுதாவூா் முகிலன்(27), பொறையூா் முகேஷ்(29), மேட்டுப்பாளையம் சானரப்பேட்டை ரங்கராஜ்(30), வழுதாவூா் ராம்குமாா்(23), வினித்(23) ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் காரில் பக்கெட் ஒன்றில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும், இவா்களில் முகிலன், முகேஷ், ரங்கராஜ், ராம்குமாா், வினித் ஆகியோா் மீது கொலை, வெடிகுண்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இவா்களிடம் இருந்த 3 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா் இவா்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
