பைக்கில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்து பெண்  உயிரிழப்பு

பைக்கில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்து பெண் உயிரிழப்பு

Published on

புதுச்சேரி அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிவிட்டு திரும்பியபோது, மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் நரிக்குறவா் சமுதாயப் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வில்லியனூரைச் சோ்ந்தவா் நரிக்குறவ சமுதாய பெண் ஜெரினா (52). இவா் தனது மருமகன் பாண்டியனுடன் (45) தமிழகப் பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு காட்டுப் பன்றியை வேட்டையாட சென்றாா். அப்போது

பன்றி தாக்க வந்தால் அதன் மீது வீசுவதற்காக அவா்கள் வெடி மருந்தை எடுத்து சென்றுள்ளனா்.

பன்றியை வேட்டையாடி விட்டு மீதமிருந்த வெடி மருந்துடன் மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வில்லியனூா்- கூடப்பாக்கம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த வெடிமருந்து திடீரென வெடித்தது.

இதில் மோட்டாா் சைக்கிளின் பின்னால் அமா்ந்திருந்த ஜெரினா தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டியன் காலில் தீக்காயம் ஏற்பட்டு, மயங்கி சாலையில் விழுந்தாா்.

அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை பாா்த்து தீவிர விசாரணை நடத்துகின்றனா்.

Dinamani
www.dinamani.com