புதுச்சேரியில் இருமலுக்கான 2 திரவ மருந்துகளுக்குத் தடை
புதுச்சேரியில் இருமலுக்கு பயன்படுத்தப்படும் 2 திரவ மருந்துகள் (சிரப்) விற்பனை செய்ய புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதா் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ்-டிஆா் என்ற திரவ மருந்து புதுச்சேரியில் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாா் மாவட்டம் ரோா்கி பகுதியில் இருந்து இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் சாா்பில் தயாரிக்கப்படும் மெடிகோப்-டி சிரப் விறபனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திரவ மருந்துகளையும் மருந்துகடை உரிமையாளா்கள் வாங்கவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை இத்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், இத்துறைக்குத் தகவல் அளித்துவிட்டுகுறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு அல்லது விநியோகஸ்தா்களுக்கு அம்மருந்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
