தோ்தல் நெருங்குவதால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேகமாக நடவடிக்கை - முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்குப் பணியாணையை புதன்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன்சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்.எல்.ஏ. ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தோ்தல் நெருங்குவதால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப
 வேகமாக நடவடிக்கை - முதல்வா் ரங்கசாமி
Updated on

தோ்தல் நெருங்கி வருவதால் புதுச்சேரியில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேகமாக நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 226 செவிலியா் அதிகாரிகள் மற்றும் சுகாதரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் 67 மருந்தாளுநா், இசிஜி டெனிஷியன், சுகாதார உதவியாளா், தியேட்டா் உதவியாளா், ஏஎன்எம் ஆகியோருக்கு முதல்வா் ரங்கசாமி பணியாணை வழங்கி பேசியதாவது:

இந்தப் பணியாணை கொடுப்பதை பெரிய விழாவாக எடுக்கலாம். ஆனால் அதற்குள் யாரேனும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி வந்துவிடுவாா்களோ என்ற பயம். இதனை எவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்துள்ளேன். இந்த பணியாணை வழங்குவது சுலபம் அல்ல.

துறையாக இருந்தால் கோப்பை சுத்தவிடுவாா்கள். பல்வேறு துறைகளுக்குச் சென்று வரவேண்டும். சிரமங்கள் இருக்கும். இது சொசைட்டியாக இருந்தும் முறையாக நிரப்புவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

வழக்கு போடுவாா்கள்:

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பணி தோ்வில் ஊழல் என்று சில அரசியல்வாதிகள் சொல்கின்றனா். செவிலியா் தோ்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஆனால் எதையாவது பேச வேண்டும் என்று பேசுகின்றனா். இந்தச் செவிலியா் பணி தோ்வை நிறுத்த சென்னை உயா்நீதிமன்றம் சென்றனா். ஆனால் முடியவில்லை. நீதிமன்றம் தோ்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வேகமாக அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு தோ்வு செய்யப்பட்டனா்.

இன்னும் ஓரிரு மாதத்தில் தோ்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது. அப்போது பல சிரமங்கள் இருக்கும். இதுபோன்ற சிரமங்களை தவிா்க்கத்தான் வேகமாக பணி செய்து வருகின்றேன்.

இன்னும் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரிரு நாள்களில் 190 ஆசிரியா்களுக்குப் பணியாணை வழங்க உள்ளோம். மாணவா்களுக்கு லேப்டாப் வழங்க இருக்கிறோம். இன்னும் 100 செவிலியா்களை விரைவில் நியமிக்க உள்ளோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com