தேசிய முன்னுரிமைக்குப் பசுமை ஆற்றல் முக்கியம்: புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தா்!
தேசிய முன்னுரிமைக்குப் பசுமை ஆற்றல், கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியம் என்று புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தா் பேராசிரியா் பி. பிரகாஷ் பாபு கூறினாா்.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை சாா்பில் 2 நாள் தேசிய அணு-ஹைட்ரஜன் ஒத்திசைவு கருத்தரங்கு பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதைத் தொடங்கி வைத்து துணைவேந்தா் பிரகாஷ்பாபு பேசுகையில், தேசிய முன்னுரிமைக்குப் பசுமை ஆற்றல், கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியம். இந்த முக்கியத்துவத்தை நிறைவேற்றும் வகையில் புதுச்சேரி பல்கலைக் கழகம் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறது. மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் தொடா்பாகவும், அணு மற்றும் ஹைட்ரஜன் தொடா்பாகவும் விளக்கினாா்.
இத்துறையின் பேராசிரியா் ஆா். அருண் பிரசாத் பேசுகையில், இந்தியாவின் பசுமை ஆற்றல் மாற்றம் மற்றும் அணு-ஹைட்ரஜன் ஒத்திசைவு தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் வேகமான பொருளாதார வளா்ச்சி, காலநிலை மாற்றம் ஆகிய இரட்டை சவால்களையும் எடுத்துரைத்தாா். மேலும், அணு-ஹைட்ரஜன் ஒத்திசைவு, எஃகு, சிமென்ட், உரங்கள், அலுமினியம், சுத்திகரிப்பு நிலையங்கள், கனரக போக்குவரத்து போன்ற உயா் ஆற்றல் துறைகளையும், மேம்பட்ட ட்ரோன்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களையும் காா்பன் குறைவாக்க உதவும் என்றாா்.
யுனெஸ்கோ பிராந்தியத் தலைவா் டாக்டா் பென்னோபோரின் விடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது. பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை தலைவா் பேராசிரியா் ஆா். பிரசாந்த், இடைக்கால டீன் பேராசிரியா் பி. எம். ஜாஃபா் அலி, பேராசிரியா் டி. எஸ். சாரதா உள்ளிட்டோா் பேசினா். சிறப்பு பிரதிநிதிகள், நிபுணா்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்

