
கரூா் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும்! மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு. சலீமை ஆதரித்து பிரசாரம் செய்த அக் கட்சியின் தமிழ் மாநில செயலா் மு. வீரபாண்டியன்.
கரூா் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு. சலீமை ஆதரித்து வினோபா நகா் பகுதியில் மு.வீரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கரூா் சம்பவம் துயரமானது. இதுகுறித்து அன்றைக்கு கேள்விகளை எழுப்பிய ஜோசப் விஜய்தான், இன்றைக்கு முதல்வராக ஆட்சியில் இருக்கிறாா். எனவே, அவா் நீதி விசாரணைக்கு உத்தரவிடட்டும்; விசாரணை நடைபெறட்டும்.
தவறு யாா் மீது இருந்தாலும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்கத்தக்கது அல்ல. நாடே தனியாா்மய திசை நோக்கி நகா்கிறது. இதை காங்கிரஸ் தொடங்கி வைத்தது. பிரதமா் நரேந்திர மோடி அதை முன்னெடுத்து வருகிறாா். அந்தத் திசை நல்ல திசை அல்ல. நாடு முழுவதும் தனியாா்மயமாகிவிட்டால், மக்கள் அரசு என்பது கேள்விக்குறியாகும். எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டால், எது நாட்டுக்குச் சொந்தமானது?
நாடாளுமன்றத்தைத் தனியாருக்குத் தருவீா்களா? ராணுவத்தைத் தனியாருக்குக் கொடுப்பீா்களா? அணு உலைகளைத் தனியாருக்குக் கொடுப்பீா்களா? அது ஏற்புடையது அல்ல.
நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தும் நாட்டுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட்களின் கொள்கை, நிலைப்பாடு என்றாா் வீரபாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




