திண்டிவனத்தில் பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

திண்டிவனம் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திண்டிவனம் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அனந்தமங்கலத்தில், சிவன் கோயில் மலைப் பகுதியின் பின்புறம் உள்ள மலைக்குன்றில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இவை சோழர் காலத்தவை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, அங்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம், அதற்கு முந்தைய பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்களான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் த.ரமேஷ், சி.ஸ்ரீதர் மற்றும் ஆய்வு மாணவர்கள் அண்மையில் ஆய்வு செய்து கூறியிருப்பது:

அனந்தமங்கலம் குன்றில் புதிதாக கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், அவை பல்லவர் காலத்தைய சிற்பங்கள் என்பதைக் காட்டுகிறது. அந்தக் கல்வெட்டில், கருபி செந்தியன் ஏவக் கருமா காளை பணி என்று குறிப்பிட்டுள்ளது. கருபிசெந்தியன் என்பவர் வேண்டுகோளின்படி கருமாகாளை என்பவர் சிற்பங்களைச் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இக்குன்றில் இயற்கையான குகைதளம் மட்டுமே உள்ளதால், அவர் இங்குள்ள அழகான சமண சிற்பங்களைச் செய்துள்ளது புலப்படுகிறது.

இங்குள்ள சிற்பங்களில் இதுவே பழைமையானதாக உள்ளது. அதில் உள்ள எழுத்தமைவு கி.பி.8ஆம் நூற்றாண்டாகும். ஆகையால், அக்காலமான பல்லவர் காலத்தில் இங்குள்ள சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

அனந்தமங்கலம் குகைப் பள்ளியில், ஓரிடத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் நான்கு சிற்பமும் மற்றொரு இடத்தில் வடக்கு நோக்கிய நிலையில் ஒரு சிற்பமும் உள்ளன. கிழக்கு நோக்கிய சிற்ப தொகுதி அடங்கிய பாறையின் கீழ்புறம் சிறிய குகைத்தளம் ஒன்று உள்ளது.

இத்தொகுதியின் வடக்கிலிருந்து தெற்காக முதலில் பார்சுவநாதர் தீர்த்தங்கரரும், அதனையடுத்து நின்ற நிலையில் மற்றொரு தீர்த்தங்கரரும் இதனையடுத்து அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரரும் இதற்கு பக்கத்தில் தர்மதேவியின் சிற்பமும் அழகாய் அமைந்துள்ளன.

முதலாவதாக உள்ள பார்சுவநாதர் தாமரை பீடத்தில் நின்ற நிலையில் தலையின் மேல் ஐந்து தலை நாகத்துடன் உள்ளார். அதனையடுத்துள்ள தீர்த்தங்கரர் தாமரை பீடத்தில் நின்ற நிலையில் உள்ளார். இவ்விரு தீர்த்தங்கரர் சிற்பங்களும் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இதனையடுத்து நடுநாயகமாகப் பெரிய அளவில் தீர்த்தங்கரர், பீடத்தில் அமர்ந்தவாறு உள்ளார். இவரது தோளுக்கு மேலே இரு சாமரதாரிகளும் அதற்கு மேலே இரு கனதரர்களும் காணப்படுகின்றனர்.

இதனையடுத்து இறுதியாக சிம்மத்தின் மீது இடது காலை ஊன்றி வலக்காலைச் சற்று வளைந்த நிலையில், தருமதேவி அழகாக நின்ற நிலையில் உள்ளார். வலப்புறத்தில் இவரது மகன்கள் இருவரும் சிறுவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். தருமதேவியின் மலர்ந்த முகமும், ஒடுங்கிய இடையும் அக்கால சிற்ப கலைஞனுக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்தச் சிற்பங்கள் அடங்கிய பாறைக்குப் பக்கத்தில் மற்றொரு பாறையில், தனியாக பார்சுவநாதர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தாமரை பீடத்தில் பார்சுவநாதர் நின்றவாறு உள்ளார்.

இவரது தலைக்கு மேலாக ஐந்து தலை நாகம் உள்ளது. பார்சுவநாதரின் வலப்புறம் பத்மாவதி வழிபடுவது போலவும், இடதுபுறம் தரனேந்திரன் மண்டியிட்டு வணங்குவது போலவும் உள்ளனர்.

முதலாம் பராந்தகச் சோழனது கி.பி. 942இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இச்சமணப் பள்ளியைக் குறிப்பிடுகிறது. எனவே பல்லவர் காலத்திலிருந்து, சோழர் காலம் வரை சிறந்த நிலையில் இச்சமணப் பள்ளி விளங்கியதை அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com