கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணியில்  குழாய்கள் உடைப்பு, கேபிள்கள் பாதிப்பு: மக்கள் அதிருப்தி

விழுப்புரத்தில் ஒருங்கிணைப்பின்றி நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத் திட்ட பணியின்போது குடிநீர் குழாய்கள்,
Updated on
1 min read

விழுப்புரத்தில் ஒருங்கிணைப்பின்றி நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத் திட்ட பணியின்போது குடிநீர் குழாய்கள், புதைவழி சாக்கடை குழாய்கள்,  தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்படுவதுடன் அதனை சீரமைக்கும் பணியும் தாமதமாகி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்புப் பகுதியில் தொடங்கி ரயில் நிலையம் பகுதி வரை சாலை விரிவாக்கப் பணியுடன், இரு புறமும் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  நெடுஞ்சாலைத் துறையினர் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், நேருஜி சாலையில் ஒருபுறம் பணிகள் முடிந்து, எதிர்புறத்தில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்வாய் பணிக்காக,  சாலையோரம் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு,  உடனே கான்கிரீட் சுவர் அமைப்பதால்,  அங்கு துண்டிக்கப்பட்ட கேபிள்கள்,  குடிநீர் குழாய்கள்,  புதைவழி சாக்கடை குழாய்கள் போன்றவை சீர்படுத்தாமல் கிடப்பில் உள்ளதாக அதிருப்தி தொடர்கிறது. 
தற்போது, காந்தி சிலை தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் கால்வாய் அமைத்து வருகின்றனர்.  இதில்,  கண்ணப்பா லே-அவுட் சாலை சந்திப்பில்,  தற்போது பள்ளம் தோண்டப்பட்டதில்,  குடிநீர் குழாய்,  புதைவழி சாக்கடைக் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால்,  பாதித்த அப்பகுதி வணிகர்கள்,  குடியிருப்புவாசிகள் அதனை சீரமைக்க வேண்டுமென்று கூறி சனிக்கிழமை பணியை தடுத்து நிறுத்தினர்.  அவர்கள் கூறியதாவது:  இந்த பகுதியில் திடீரென கால்வாய்க்காக பள்ளம் தோண்டினர்.  அதில்,  புதைவழி சாக்கடை குழாய்கள்,  குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது.  தொலைபேசி கேபிளும் துண்டிக்கப்பட்டது.
இவற்றை சரிசெய்யாத நிலையில்,  உடனே கான்கிரீட் கால்வாய் கட்டமைப்புகளை மேற்கொள்கின்றனர்.  இது குறித்து,  நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் கொடுத்தபோது,  அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.  
இதே போல,  கிழக்கு பாண்டி சாலை, நேருஜி சாலையின் இரு புறமும் கால்வாய் பணிக்காக,  நெடுஞ்சாலைத் துறையினர் கேபிள்கள்,  குடிநீர் குழாய்,  பாதாள சாக்கடை குழாய்களை துண்டித்ததை அப்படியே விட்டு,  கான்கிரீட் கால்வாய் அமைக்கின்றனர்.
இதனை சீரமைக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம்,  பிஎஸ்என்எல் நிர்வாகம் போன்ற துறையினர் ஒருங்கிணைப்பின்றி இருப்பதால்,  கான்கிரீட் கட்டமைப்பை உடைத்து பிறகு சீர் செய்வதால் பணிகள் தாமதமாவது தொடர்கிறது.  இதனால்,  தொடர்புடைய துறையினருடன் ஒருங்கிணைத்து கால்வாய் கட்டமைப்பு,  சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.  இது குறித்து,  நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது,  கால்வாய்த் திட்டப் பணிகளின் போது உடைபட்ட குழாய்கள்,  கேபிள்கள் குறித்து உரிய துறையினருக்குத் தெரிவித்து சீரமைக்கப்படுகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com