செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 01st April 2019 10:00 AM | Last Updated : 01st April 2019 10:00 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை அதற்கான பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள லட்சுமி நகர், மகாதேவன் நகர் உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தனியார் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை அண்மையில் தொடங்கியுள்ளது.
ஆனால், குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதால், அதிலிருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்கள், விலங்குகள்,
பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் இடத்துக்கு அருகிலேயே பள்ளி வளாகம், அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளதால், இந்தப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், நகராட்சி அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் முறையிட்டனர். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி அமைப்பதற்காக நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் நகர போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.