லாரியில் கடத்தப்பட்ட 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல்
By DIN | Published On : 01st April 2019 09:59 AM | Last Updated : 01st April 2019 09:59 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே சனிக்கிழமை இரவு லாரியில் கடத்தப்பட்ட 1,200 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் செ.வள்ளிக்கு கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து கோட்டக்கரை வழியாக லாரியில் சாராயம் கடத்திச் செல்லப்படுவதாக சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்ததாம்.
அதனடிப்படையில், அக்கராபாளையம் ஓடைக்காடு பகுதியில் கச்சிராயப்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் ராஜேந்திரன், பிரபு உள்ளிட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸாரைக் கண்டதும் சற்று தொலைவில் ஒரு லாரியை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து தப்பியோடிவிட்டார். பின்னர், லாரியில் போலீஸார் சோதனையிட்டபோது, அதில் 40 லாரிடியூப்களில் 1,200 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாராயத்துடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதனை கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாராயத்தை கடத்திச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.