வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை மாற வேண்டும்: கமல்ஹாசன்
By DIN | Published On : 01st April 2019 09:58 AM | Last Updated : 01st April 2019 09:58 AM | அ+அ அ- |

வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தின் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்பின்பொய்யாமொழி, ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஷாஜி ஆகியோரை ஆதரித்து திண்டிவனம் காந்தி சிலை அருகில் அந்தக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு புரட்சி மாற்றத்தின் நுனியில் தமிழக மக்கள் நின்றுகொண்டுள்ளனர். நல்ல கட்சிக்கு வாக்களியுங்கள். நேர்மையும், மக்கள் நீதி மய்யமும் நெருங்கிய உறவினர்கள். மக்கள் நீதி மய்யம் சார்பில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் ராஜிநாமா கடிதம் பெறப்படும். மேலும், அவர்கள் கட்சியில் இருந்தும் நீக்கப்படுவர். வாக்காளர்களின் ஏழ்மை, வறுமையைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் பணம் அளித்து வாக்குகளைப் பெறுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். வாக்கு மையத்துக்கு நூறு மீட்டர் தொலைவுக்கு முன்னால் நடந்து செல்லும்போது, நாட்டைப் பற்றி சிந்தியுங்கள். தமிழகத்தின் குரலை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் ஓங்கி ஒலிப்பார்கள் என்றார் அவர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...