வாக்குச் சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 01st April 2019 10:02 AM | Last Updated : 01st April 2019 10:02 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகள் அளவில் வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சட்டப் பேரவை அளவில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள விடுபட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான குமாரவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பிரபு வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் லில்லிராணி, மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடசுப்பிரமணியன், வெங்கட்ராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்யின்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களை எப்படி இயக்க வேண்டும், விவிபாட் இயந்திரத்தை எப்படி இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.