24 வேட்பாளர்கள் போட்டி: கள்ளக்குறிச்சி தொகுதியில் கூடுதலாக 1,170 வாக்குப் பதிவு இயந்திரங்கள்
By DIN | Published On : 01st April 2019 10:00 AM | Last Updated : 01st April 2019 10:00 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் கூடுதலாக 1,170 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளர்களின் பெயர்கள், விவரங்களை மட்டும் வைக்க முடியும்.
எனவே, ஒரு மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியும்.
ஆனால், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆகையால், இந்தத் தொகுதியில் 2 வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஏற்கெனவே ஒரு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபாட் கருவி ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது, 24 வேட்பாளர்களின் விவரங்களும் வைக்கத் தேவையான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்காக, அவற்றை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில், கணினி மூலம் குலுக்கல் முறையில் 1,170 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கள்ளக்குறிச்சி உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.