ஃபானி புயல்: கிராமங்களில் முன்னேற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தல்
By DIN | Published On : 26th April 2019 07:32 AM | Last Updated : 26th April 2019 07:32 AM | அ+அ அ- |

ஃபானி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில்
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் பேசியதாவது: ஃபானி புயல், பெருமழை முன்னறிவிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாகவும், முழு அக்கறையுடனும் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் தங்கள் கீழுள்ள பணியாளர்கள் முழுமையாக பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்துக்குத் தேவையான ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊராட்சிச் செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தேவையான தண்ணீர் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
புயலின்போது சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கு போதுமான அளவு மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்களை தேவையான அளவு பெட்ரோலுடன் தயார் நிலையில் வைத்திருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வட்டத்திலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அவசர காலத்தில் பயன்படுத்திடத் தேவையான அளவு எரிபொருள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானூர், மரக்காணம் வட்டங்களில் உள்ள 19 மீனவ குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட முழுமைக்கும் 148 கால்நடை பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாம்பு பிடி நபர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், தொலைபேசி எண் 1077 மற்றும் 04146-223265 ஆகியவற்றும், குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 18004253566 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதில், முக்கிய அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் எஸ்.இந்திரா வரவேற்றார்.
கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன், தனி வட்டாட்சியர்கள் ராஜராஜன், துணை வட்டாட்சியர்கள் கமலக்கண்ணன், குணசேகரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினர், மின் வாரிய அலுவலர்கள், மருத்துவத் துறையினர், பொதுப்பணித் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.