சாலையில் தேங்கும் கழிவுநீர்: சிறுபாலம் அமைக்கப்படுமா?
By DIN | Published On : 26th April 2019 07:33 AM | Last Updated : 26th April 2019 07:33 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் என்ஜிஜிஓ நகரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, கழிவு நீரை வெளியேற்றும் வகையில், இந்தப் பகுதியில் சிறு பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருக்கோவிலூர் பேரூராட்சியில் மிகவும் முக்கியமான பகுதியாக என்ஜிஜிஓ நகர் விளங்குகிறது. அங்கவை, சங்கவை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன் இந்த நகருக்குச் செல்லும் பிரதான நுழைவு வாயில் அமைந்துள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து நேரு வீதி என்றழைக்கப்படும் தாசர்புரம் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலையின் முடிவில் வடிகால் வசதி எதுவும் கிடையாது.
இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தேங்குவதால், அந்தப் பகுதி எப்போதும் சேறும், சகதியுமாக மாறி, சுகாதாரச் சீர்கேடான நிலையில் காட்சியளிக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இந்தச் சாலைப் பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரிலிருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால், தாசர்புரம் பகுதியில் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தாசர்புரம் பகுதியில் சாலையில் கழிவு நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்தப் பகுதியில் சிறு பாலம் அமைக்க திருக்கோவிலூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.