அரசு மருத்துவர்கள் போராட்டம்; 137 பேர் பங்கேற்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவீத அரசு
Updated on
1 min read

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவீத அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். 
தமிழக அரசு மருத்துவர்களுக்கு,  உரிய ஊதிய உயர்வை, அவர்கள் பணியில் சேர்ந்த 13-ஆவது ஆண்டிலிருந்து வழங்க வேண்டும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவப் பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் மட்டுமே பணியிடங்களை ஒதுக்க வேண்டும். 
அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை படிப்புகளிலும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும், ஏற்கெனவே உள்ள 50 சதவீத இட
ஒதுக்கீட்டையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும்  அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில்,  ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழுப்புரம் மாவட்டத்திலும், அரசு மருத்துவர்கள் பலர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில்,  அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருள்சுந்தர் தலைமையில்,  மொத்தமுள்ள 23 மருத்துவர்களில்,  20 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.  அவசர சிகிச்சைப் பிரிவைத் தவிர, பிற அனைத்து மருத்துவப் பணிகளையும் புறக்கணித்து, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  புறநோயாளிகள் பிரிவு, பிற சிகிச்சைகளுக்காக வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,  வரிசையில் காத்திருந்து,  பணியிலிருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். 
இதே போல, விழுப்புரம் அரசு மருத்துவனையில், மருத்துவர் கோகிலவாணி தலைமையில், மொத்தமுள்ள 23 பேரில், 19 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.  திண்டிவனம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் முத்துக்குமரன் தலைமையில் மொத்தமுள்ள 20 பேரில் 12 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். 
செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் முத்துக்குமார் தலைமையில், மொத்தமுள்ள 12 பேரில், 10 பேரும்,  திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ராஜவிநாயகம் தலைமையில் 15 பேரும்,  சங்கராபுரத்தில் மருத்துவர் ராஜ்மோகன் தலைமையில் 6 பேரும், மரக்காணத்தில் மருத்துவர் அருண் தலைமையில் 6 பேரும், வானூரில் மணிசுந்தரம் தலைமையில் 3 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் முத்துக்குமார் தலைமையில் மொத்தமுள்ள 35 பேரில் 25 பேரும், சின்னசேலத்தில் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் மொத்தமுள்ள 10 பேரில் 4 பேரும், உளுந்தூர்பேட்டையில் மருத்துவர் பாலமுருகன் தலைமையில் மொத்தமுள்ள 18 பேரில் 17 மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
தலைமை மருத்துவர்கள் மூலம் சமாளிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள்,  ஒரு அரசு மருத்துவக்கல்லூரியில், மொத்தமுள்ள 172 அரசு மருத்துவர்களில்,  137 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 35 மருத்துவர்கள் பணிக்கு வந்திருந்தனர்.  
இவர்களுடன்,  இணை இயக்குநர்,  துணை இயக்குநர்கள்,  தலைமை மருத்துவர்கள்,  பயிற்சி மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு,  நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, நிலைமையை 
சமாளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com