விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய புத்தாக்க பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த 2 நாள் பயிற்சி முகாமின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர்.செந்தில் தலைமை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய புத்தாக்க பயிற்சி நிறுவன தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ்.கிஷோர்குமார் தொடக்கி வைத்துப் பேசுகையில், இந்த பயிற்சி மூலம் தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் தூண்டப்படுவதோடு, தொழில் முனைவோர்களுக்கு அரசு அளிக்கும் ஊக்கம், மானியங்கள், பயிற்சிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு கல்லூரியிலும் இரண்டு தொழில் முனைவோர்களை ஏற்படுத்தினாலே இத்திட்டத்தின் நோக்கம் சிறப்பாக அமையும் என்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பி.அர்ஜூன் நன்றி கூறினார்.
பயிற்சி முகாமில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.