பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: விவசாயிக்கு கத்திக் குத்து
By DIN | Published On : 04th January 2019 09:37 AM | Last Updated : 04th January 2019 09:37 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் விவசாயி கத்தியால் குத்தப்பட்டார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் அய்யப்பன் (33) விவசாயி. இவருடைய அக்கா சின்னம்மா (35), தங்கை ஜெயலட்சுமி (25). இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் தனது தங்கை ஜெயலட்சுமிக்கு கடனாக ரூ.29,000 கொடுத்திருந்தாராம்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அய்யப்பன் மங்களூர் சென்று ஜெயலட்சுமியிடம் கொடுத்த பணத்தை கேட்டாராம். அதற்கு ஜெயலட்சுமி, "என்னுடைய நிலத்தை நீதான் பயிர் செய்து வருகிறாய்; பிறகு எதற்கு பணம் கேட்கிறாய் என்று கூறி பணம் தர மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து, மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அய்யப்பன் கோபித்துக் கொண்டு ஊர் திரும்பிவிட்டாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை சின்னம்மா மகன் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது, அய்யப்பன் தான் மங்களூர் சென்று வந்தது குறித்து அவரிடம் முறையிட்டாராம்.
அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், மாமா அய்யப்பனை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த அய்யப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து வரஞ்சரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.