வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 04th January 2019 09:34 AM | Last Updated : 04th January 2019 09:34 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
முன்னதாக, தி.அத்திப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டம், 2018-19ன் கீழ் ரூ.1.50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு பண்ணை குட்டைகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, வீரபாண்டி ஊராட்சியில், ஊரக வேலை உறுதித் திட்டம் 2014-15ன் கீழ் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கோழிக் கொட்டகையையும், முன்மாதிரி கிராமத் திட்டம் 2016-17ன் கீழ் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தானியக் களத்தையும் ஆய்வு செய்தார்.
மேலும், தண்டரை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டம் 2017-18ன் கீழ் ரூ.3.50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பு அணையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.