வழக்குரைஞர் மீதான தாக்குதலைக் கண்டித்து மறியல்
By DIN | Published On : 04th January 2019 09:33 AM | Last Updated : 04th January 2019 09:33 AM | அ+அ அ- |

சென்னை வழக்குரைஞரைத் தாக்கிய டி.எஸ்.பி., காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கபில்ரங்கா, பொக்காராம் ஆகியோரின் நிறுவனப் பெயரை பயன்படுத்தி விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர், வெள்ளி
வியாபாரம் செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரான பேவல் (54) விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக குற்றப் பிரிவு போலீஸாரை சந்திக்க கபில்ரங்காவுடன் வழக்குரைஞர் பேவல் விழுப்புரத்துக்கு புதன்கிழமை வந்தார். அப்போது, மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி. சரவணனுக்கும், பேவலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், டி.எஸ்.பி. சரவணன், காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் அவதூறாகப் பேசி, பேவலைத் தாக்கினராம். இதுகுறித்து இரு தரப்பினரும் விழுப்புரம் தாலுகா போலீஸில் புகார் அளித்தனர்.
வழக்குரைஞர் பேவலை தாக்கிய டி.எஸ்.பி, உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், விழுப்புரம் நீதிமன்ற வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குரைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உதவி ஆய்வாளர் அண்ணாதுரை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். டி.எஸ்.பி. தொடர்பாக விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்குரைஞர்கள் மறியலைக் கைவிட்டனர். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதவி ஆய்வாளர் அண்ணாதுரையை ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.