குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு

தமிழக அரசு அறிவித்தபடி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் திங்கள்கிழமை முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்

தமிழக அரசு அறிவித்தபடி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் திங்கள்கிழமை முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீள கரும்புத் துண்டு ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது.
அதன் பேரில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்படும்.
இப்பணி திங்கள்கிழமை (ஜன.7) தொடங்கி பொங்கலுக்கு முன்னர் முடிக்கப்படும். 
குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்க்க, 1000 குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில், தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும். 
 சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க காவல் துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். 
மின்னணு குடும்ப அட்டையை தொலைத்தவர்கள்  மற்றும் விற்பனை முனைய இயந்திரத்தில் ஸ்கேன் ஆகாத மின்னணு குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையிலுள்ள நபர்களின் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் கடவுச்சொல் அடிப்படையிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனத் 
தெரிவித்துள்ளார் ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com