விழுப்புரத்தில் தொடர் திருட்டு: சென்னையைச் சேர்ந்தவர் கைது
By DIN | Published On : 07th January 2019 09:58 AM | Last Updated : 07th January 2019 09:58 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சென்னையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட விராட்டிக்குப்பம் பகுதியில் உள்ள கஜேந்திரன் என்பவரது வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பு
3 பவுன் தங்க நகைகள் திருடுபோயின.
இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதேபோன்று, விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடி வந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, சென்னை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததோடு, அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே, போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்த பழனி மகன் மோகன் (எ) சகாயராஜ் (43) என்பதும், விழுப்புரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில், கஜேந்திரன் வீடு மற்றும் விழுப்புரம் மகாராஜபுரத்தில் ஒரு வீட்டிலும், வி.மருதூரில் ஒரு வீட்டிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருட்டு வழக்கில் எதிரியை கைது செய்து நகைகளை மீட்ட உதவி ஆய்வாளர் மருது உள்ளிட்ட போலீஸாரை, காவல் ஆய்வாளர் காமராஜ் பாராட்டினார்.