கள்ளக்குறிச்சி அருகே பேருந்து- வேன் மோதல்: 10 பேர் பலி
By DIN | Published On : 19th July 2019 12:28 AM | Last Updated : 19th July 2019 12:28 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே வியாழக்கிழமை அதிகாலை சொகுசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய உயரழுத்த மின் கோபுரம் அமைப்பதற்காக, ஜார்க்கண்ட் மாநிலம், சந்திரா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கேந்தர் புனியா (35), காரு ரஜாக் (30), அனோஜ் ரஜாக் (19), செமன் ரஜாக் (28), சோட்டு குமார் (23), ராஜ் புனியா (30), அனோஜ் புனியா (35), அசோக் புனியா (27), சுக்குதேவ் ரஜாக் (55), பப்லு ரஜாக் (27), சாம்தேவ் (30) மற்றும் மதுரை மாவட்டம், தெய்வவிநாயகபுரத்தைச் சேர்ந்த கூடாண்டி மகன் லிங்கம் (19), விருதுநகர் மாவட்டம், கோவிந்தநல்லூரைச் சேர்ந்த கருப்பையா மகன் மீனாட்சி சுந்தரம் (33) உள்ளிட்ட 13 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இருந்து சரக்கு ஏற்றிச் செல்லும் வேனில் புதன்கிழமை இரவு புறப்பட்டனர்.
மதுரை மாவட்டம், தெய்வவிநாயகபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன் (32) வேனை ஓட்டிச் சென்றார்.
கோவையில் இருந்து சென்னைக்கு 24 பயணிகளுடன் தனியார் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்தை திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜேந்திரன் (56) ஓட்டினார். அவருடன் மற்றொரு ஓட்டுநரான கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரவிச்சந்திரன் (28) உடனிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள ஏமப்பேரில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பேருந்தும், வேனும் வந்த போது, நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சரக்கு வேன் முற்றிலும் சேதமடைந்தது. பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன், சரக்கு வேனின் ஓட்டுநர் மணிகண்டன், அதில் வந்த தொழிலாளர்கள் முக்கேந்தர் புனியா, காரு ரஜாக், அனோஜ் ரஜாக், செமன் ரஜாக், சோட்டு குமார், ராஜ்புனியா, அனோஜ் புனியா ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனாட்சி சுந்தரம், லிங்கம், சுக்குதேவ் ரஜாக், பப்லு ரஜாக், சாம்தேவ், அசோக் புனியா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக இவர்கள் சேலம், கோவை, விழுப்புரம் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அசோக் புனியா, அங்கு உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பேருந்து பயணிகள் யாருக்கும் காயமேற்படவில்லை. அவர்கள் மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.