2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 09th June 2019 03:09 AM | Last Updated : 09th June 2019 03:09 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.22,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள அந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (45), விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு காற்றுக்காக வீட்டின் முன் உள்ள திண்ணையில் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு படுத்து தூங்கினார். அப்போது, இவரது வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ.11,000 பணத்தை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி அலமேலு (40) வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.10,000 பணத்தை திருடினர்.
மேலும், வீட்டின் முன்புறம் படுத்திருந்த அலமேலு அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.