ஆசிரியர் தகுதித் தேர்வு: 9,993 பேர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 28 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 9,993 பேர் எழுதினர்.


விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 28 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 9,993 பேர் எழுதினர்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு - 2019, இரு தினங்களாக நடைபெறுகிறது. முதல் தாள் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. 
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி,  திண்டிவனம்,  உளுந்தூர்பேட்டை,  திருக்கோவிலூர், செஞ்சி  மற்றும் விழுப்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 11,063 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல் தாள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 11,063 பேரில் 9,993 பேர் கலந்து கொண்டனர். 1,070 பேர் வருகை தரவில்லை. இவர்களில் 258 மாற்றுத் திறனாளிகள், 10 பார்வையற்றவர்களும் தேர்வில் பங்கேற்றனர். 
தலா 28 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், 620 அறை கண்காணிப்பாளர்கள், 196 அலுவலகப் பணியாளர்கள்,  8 வழித்தட அலுவலர்கள், 112 காவலர்கள் மற்றும் 56 துறைப் பணியாளர்கள், 168 பரிசோதனையாளர்கள் தேர்வுப் பணிகளை மேற்கொண்டனர். 
சோதனைக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதி...: இந்தத் தேர்வுக்காக, 6 கல்வி மாவட்டங்களிலும் வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அங்கிருந்து வினாத் தாள்கள் மையங்களுக்குக் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டன.  காலை 9 மணிக்கு தேர்வர்கள் மையத்துக்கு வந்தனர். இவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கி பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.
அதிகாரிகள் ஆய்வு...: இந்தத் தேர்வுப் பணியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்துக்குச் சென்ற அவர், தேர்வு அறைகளில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
விழுப்புரம் மாவட்டத் தேர்வை  அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) எஸ்.சேதுராமவர்மா பார்வையாளராகப் பங்கேற்று கண்காணித்தார். 6 மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையினரும்,  உதவி ஆட்சியர்,  கோட்டாட்சியர்கள் தலைமையில் 4 பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையிட்டுக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று இரண்டாம் தாள் தேர்வு...: தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரண்டாம்  தாள் தேர்வு நடைபெறுகிறது. 67 தேர்வு மையங்களில் 25,626 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com