ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 09th June 2019 03:11 AM | Last Updated : 09th June 2019 03:11 AM | அ+அ அ- |

திண்டிவனத்தை அடுத்த சாரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் முன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் ஒலக்கூர் வட்டாரத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சரவணன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் கணபதி கண்டன உரையாற்றினார்.
அங்கன்வாடிகளில் முன் பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற வேலையில்லாத ஆசிரியர்களை பணி நியமனம் செய்திட வேண்டும், 2010ஆம் ஆண்டுக்குப் பின் ஆசிரியர்களாக நியமனம் பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் கருதி தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும், அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், வட்டாரச் செயலர் சந்தோஷ்குமார், வட்டாரப் பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.