காணை வட்டாரத்தில்ரூ. 6.65 கோடியில் நுண்ணீர் பாசனத் திட்டம்

காணை வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு ரூ. 6.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உதவி வேளாண் இயக்குநர் சரவணன் தெரிவித்தார்.


காணை வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு ரூ. 6.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உதவி வேளாண் இயக்குநர் சரவணன் தெரிவித்தார்.
விழுப்புரம் அருகே உள்ள காணையில் நுண்ணீர் பாசன நிறுவனங்களின் களப் பணியாளர்கள், அட்மா திட்ட உழவர் குழு நண்பர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளுக்கு  நுண்ணீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் க.சரவணன் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:  காணை வட்டாரத்தில் நெல், கம்பு,  உளுந்து, மணிலா, எள், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  
மத்திய, மாநில அரசுகள் வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. வறட்சியால்,  தண்ணீர் பற்றாக்குறை உள்ள தற்போதைய கால கட்டத்தில், குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுவதற்கான உத்திகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நீர் சிக்கன முறையில் சொட்டு நீர் பாசனம்,  தெளிப்பு நீர் பாசனம், மழைத் தூவுவான் ஆகிய உபகரணங்களைப் பயன்படுத்தி, பயிர்களுக்கு நீர்ப்  பாசனம் செய்து பயன் பெறலாம். இந்தத் திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும்,  இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை,  சிட்டா,  அடங்கல்,  சிறு குறு விவசாயிக்கான சான்றிதழ், நில வரைபடம் மற்றும் மண் பரிசோதனை ஆவணங்களை  உதவி வேளாண் அலுவலர்கள் அல்லது நுண்ணீர் பாசன முகவர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.  
பதிவு செய்த விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்து,  அவர்களது தேவைக்கு ஏற்ப நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கப்படும்.  நுண்ணீர் பாசனத் திட்டத்துக்காக காணை வட்டாரத்துக்கு ரூ. 6.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
விவசாயிகள் அனைவரும் இதைப் பெற்று பயனடைய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்வில் வேளாண் அலுவலர் வரதராஜன், தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி,  உதவி வேளாண் அலுவலர்கள் செல்வகுமார்,  மணிவண்ணன்,  பிரபாகரன், அன்பு மற்றும்  விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com