பள்ளிகளிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பக பதிவு செய்யலாம்
By DIN | Published On : 09th June 2019 03:11 AM | Last Updated : 09th June 2019 03:11 AM | அ+அ அ- |

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய ஆவணங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து சென்று பதிவு செய்துகொள்ளலாம். 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு, அதுகுறித்த வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லை எனில், வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த பதிவுப் பணிகள் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. வருகிற 17-ஆம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே பதிவுகள் நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்புத் தேதியாக வழங்கப்படும்.
மேலும் வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிரபாவதி அறிவுறுத்தினார்.