அதிமுக பிரமுகர் காருக்கு தீ வைத்த வழக்கில் 6 பேர் கைது
By DIN | Published On : 14th June 2019 09:54 AM | Last Updated : 14th June 2019 09:54 AM | அ+அ அ- |

கோட்டக்குப்பம் அருகே அதிமுக நகரச் செயலர் காருக்கு தீ வைத்த வழக்கில் 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த கோட்டக்குப்பம் அதிமுக நகரச் செயலர் கணேசன் (50). இவரது வீட்டில் நிறுத்தி இருந்த சொகுசு காரையும், இவரது உறவினரான பாலாவின் (30) வீட்டில் நிறுத்தியிருந்த ஆட்டோவையும் கடந்த திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த சதீஷுக்கும், கணேசன் தம்பி அசோகன், உறவினர் பாலா ஆகியோருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கணேசனின் கார், பாலாவின் ஆட்டோ ஆகியவற்றை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, சதீஷ் (36) மற்றும் அவரது நண்பர்களான ஆனந்த் (27), மணிகண்டன் (25), திவ்யபாரத் (24), சரத்குமார் (26), பூபாலன் (26) ஆகிய 6 பேரை கோட்டக்குப்பம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.