உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 14th June 2019 09:53 AM | Last Updated : 14th June 2019 09:53 AM | அ+அ அ- |

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் இதர பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவும், குடிநீர் பிரச்னைகள் பெரிய அளவில் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்திடவும், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் மின்மோட்டார் பழுது, குடிநீர் குழாய் பழுது, நீர் மட்டம் கீழே செல்வது, மின் இணைப்புகள் பழுது உள்ளிட்ட பிரச்னைகளை கண்டறிந்து, சரி செய்து அனைவருக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போது, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளர் ராமலிங்கம், உதவித் திட்ட அலுவலர் ஆறுமுகம், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், உதவிப் பொறியாளர் ரங்கபாஷ்யம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.