மேல்நாரியப்பனூர் அந்தோணியார் தேவாலய தேர்த் திருவிழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலய பெருவிழாவின்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலய பெருவிழாவின் தேர்த் திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தை அடுத்த மேல்நாரியப்பனூரில் பழைமையான புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேவாலய பெருவிழா கோலாகலமாக நடைபெறும். 
நிகழாண்டு பெருவிழா கடந்த ஜூன் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் 
சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. திருப்பலியில் பல்வேறு ஊர்களில் இருந்து பங்குத்தந்தைகள், அருள்தந்தைகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா தேர்த் திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் மாலை வரையில் பெருவிழா சிறப்பு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. 
இந்த திருப்பலியில் மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தேவராஜ், புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர், பெரம்பலூரைச் சேர்ந்த பங்குத்தந்தை ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். 
திருப்பலி நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
நள்ளிரவு பெருவிழா பெரிய தேர் பவனி தொடங்கியது. மின் விளக்குகளில் அங்கரிக்கப்பட்ட முதல் தேரில் சூசைப்பர், 2-ஆவது பெரிய தேரில் மாதா, 3-ஆவது தேரில் அந்தோணியார் சிலைகள் வைக்கப்பட்டு, பவனிக்கு தேர்கள் தயார் செய்யப்பட்டன.
தேர் பவனியை ஆத்தூர் பங்குத்தந்தை கிரகோரிராஜன், மேல்நாரியப்பனூர் பங்குத்தந்தை பால்ராஜ், காங்கேயம் பங்குத்தந்தை சேவியர் கிளாடியஸ் ஆகியோர் தொடக்கிவைத்தார். தேர்களை பக்தர்கள் மேல்நாரியப்பனூரின் முக்கிய வீதிகள் வழியாக 
இழுத்துச் சென்றனர். 
விழாவில், விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அதிகாலை வரையில் நடைபெற்ற தேர் பவனிக்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பிக்கள் ராமநாதன், சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தேர்த் திருவிழாவையொட்டி, மேல்நாரியப்பனூருக்கு விழுப்புரம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 
பெருவிழாவின் நிறைவாக வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை பெருவிழா கொடியிறக்கம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com