விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை தடுக்கப்படுமா?
By நமது நிருபர், விழுப்புரம் | Published On : 06th March 2019 08:45 AM | Last Updated : 06th March 2019 08:45 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனையை தடுக்க காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகரில் கூலித் தொழிலாளர்கள், கட்டடப் பணிக்கு செல்வோர், மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள், நகைத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் போன்ற தினக் கூலி தொழிலாளர்களை குறிவைத்து, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 3 நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனை அமோகமாக உள்ளது.
விழுப்புரம் நகரில் காமராஜர் வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயிலடி, கே.கே. சாலை உள்ளிட்ட இடங்களில் 3 எண் லாட்டரி சீட்டுகளுக்கான விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். கே.கே. சாலை சிக்னல் பகுதியில் தினமும் காலை நேரத்தில் கட்டட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவது வழக்கம். இவர்களை குறிவைத்து லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்களும், அந்த இடத்தில் முகாமிடுகின்றனர். இவர்கள் இணைய வழியாக விற்பனை செய்யப்படும் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் கடைசி 3 எண்கள் மட்டும் குறித்து கொடுப்பர். ரூ.30, ரூ.50 விலைகளில் லாட்டரிச் சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவரே 10 முதல் 50 சீட்டுகள் வரை ஒரு நாளில் வாங்கும்போது, பெரும் தொகை இதற்காக செலவழிக்கப்படுகிறது.
முதல் நாள் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைபவர்கள், இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலில் வேலைக்குச் செல்வதையும் கைவிட்டு, கடன் வாங்கியாவது
லாட்டரி சீட்டு வாங்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனால், தொழிலாளர்கள் கடனாளியாக மாறி விடுகின்றனர். மேலும், பரிசு கிடைக்காத தொடர் ஏமாற்றத்தால் உளவியல் ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக சிலர் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்படுகின்றனர். கடன் சுமையால் பலர் ஊரைவிட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமான லாட்டரிச் சீட்டு விற்பனையை காவல்துறையும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. பெயரளவுக்கு எப்போதாவது ஒரு சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், இத்தொழிலில் செல்வாக்குடன் இருக்கும் நபர்கள் கைது செய்யப்படுவது இல்லை. இந்தநிலையில், விழுப்புரம் காவல் உள் கோட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை காவல் கண்காணிப்பாளர் வி.வி.திருமால் லாட்டரி சீட்டு விற்பனையை, தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.