விழுப்புரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு
By விழுப்புரம், | Published On : 06th March 2019 08:51 AM | Last Updated : 06th March 2019 08:51 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்ததுடன், தாயின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணவர் புகார் அளித்தார்.
விழுப்புரம் அருகேயுள்ள கெடார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (25), பெயின்டர். இவரது மனைவி கிரிஜா(22). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கெடார் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், பணியிலிருந்த செவிலியர்கள் கிரிஜாவுக்கு பிரசவம் பார்த்தனர். திங்கள்கிழமை காலை ஆண் குழந்தை பிறந்து, இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கிரிஜாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், அவரை செவிலியர்களின் உதவியுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கும் ரத்தப் போக்கு தொடர்ந்ததால், கணவர் சந்திரசேகரின் அனுமதி பெற்று, கிரிஜாவின் கர்ப்பப்பை நீக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக குழந்தை இறந்ததுடன், மனைவியின் கர்ப்பப்பையையும் நீக்கம் செய்ததால், தனது, குடும்ப எதிர்காலமே பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், இதற்குக் காரணமான மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிகிச்சை குறித்த முழு விவரங்களையும் வழங்க வேண்டும், பாதிப்புக்கு உரிய நஷ்டஈடு தர வேண்டும் என்று, கிரிஜாவின் கணவர் சந்திரசேகர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். மேலும், அவரது உறவினர்களும் அரசு மருத்துவக் கல்லூரியில் திரண்டு முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறியதாவது:
கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு ஊழியராக பணிபுரியும் சந்திரசேகரின் தாய் முன்னிலையில்தான் கிரிஜாவுக்கு பிரசவம் நடந்துள்ளது. அது துணை சுகாதார நிலையம் என்பதால், மாலை 4 மணி வரைதான் மருத்துவர்கள் பணியில் இருப்பர். எனினும், உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டபோது, தொப்புள்கொடி கழுத்தில் சுற்றியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை காலை 6.45 மணியளவில் இறந்த நிலையில் பிறந்தது. தாய்க்கு தொடர்ச்சியாக ரத்தப்போக்கு இருந்ததால், அவரை காப்பாற்றும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரியில் கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். தற்போது, அவர் உடல் நலம் தேறி வருகிறார். தவறான சிகிச்சைக்கு வாய்ப்பில்லை. இது இயற்கையாக நடந்த எதிர்பாராத நிகழ்வு. இருந்தபோதும், சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளதால், மருத்துவக் குழு மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.