விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாதிரி வாக்குப் பதிவு
By DIN | Published On : 22nd March 2019 09:21 AM | Last Updated : 22nd March 2019 09:21 AM | அ+அ அ- |

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களவைத் தேர்தல் மாதிரி வாக்குப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட தேர்தல் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் தனியார் நடனப் பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பார்வையிட்டார். இதில், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலின்போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபாட் சாதனத்துடன் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்று மாதிரி வாக்குப் பதிவு செய்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா,
உதவித் தேர்தல் அலுவலர் கே.ராஜேந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கரநாராயணன், நிலைய மருத்துவ அலுவலர் கதிர், விக்கிரவாண்டி வட்டாட்சியர் சுந்தரராஜன், கூடுதல் உதவித் தேர்தல் அலுவலர் பிரபாகரன், துணை வட்டாட்சியர்கள் பாண்டியன், சிவா, ஹரிதாஸ், மருத்துவக் கண்காணிப்பாளர் புகழேந்தி, மருத்துவ அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...